Monday, August 9, 2010

பொன்முடி


டாக்டர் தெய்வ சிகாமணி என்கிற பொன்முடி, எம்.ஏ., (வரலாறு), எம்.ஏ., (பொது
நிர்வாகம்), எம்.ஏ., (சமூக அறிவியல்), பி.எட்., பி.ஜி.எல்., பிஹெச்.டி!

தமிழ்நாட்டு அமைச்சரவையில் மெத்தப் படித்த மேதாவி. பெயரைவிட நீளமான இந்தப் பட்டங்களை போட்டுத்தான் ஆரம்ப காலத்தில் தன்னை அறிமுகப்படுத்திக்கொள்வார். இன்று, எந்த டி.வி-யில், எந்த சீரியல், எத்தனை மணிக்கு வருகிறது. அதில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்பதை வரிசையாகச் சொல்லும் அளவுக்கு பொன்முடியின் கலை ஆர்வம் அதிகமாகிவிட் டதாக நண்பர்கள் சொல்கிறார்கள்.

அமைச்சர் பொன்முடியுடன் பிறந்தவர்கள் தியாகராஜன், நடன சிகாமணி, ராதா சிகாமணி, கோபி சிகாமணி, கார்த்திக் சிகாமணி, வைஜெந்தி மாலா, மல்லிகா என எட்டுப் பேர். சமணத் தீர்த்தங் கர்களில் முக்கியமான ரிஷபநாதர் பெயர் சிகாமணி. இவரது குடும்பத்து மூதாதையருக்குச் சமண மதத்துடன் தொடர்பு இருந்ததால், இத்தனை சிகாமணிகள். அப்பா கந்தசாமி, சித்தலிங்கம் மடம் தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராக இருந்தவர். அம்மா மரகதமும் ஆசிரியைதான். வரும் ஆகஸ்ட் மாதம், 60 வயதில் அடியெடுத்துவைக்கிறார் பொன்முடி. ஆனால், துள்ளல் நடை இன்னும் இளமையாகத்தான் வைத்திருக்கிறது.

17 ஆண்டு காலம் கல்லூரி ஆசிரியப் பணியில் இருந் தவர் பொன்முடி. விழுப்புரம் கலைக் கல்லூரியில் பணியில் இருந்தபோது திராவிடர் கழக மேடைகளில் இவரை அதிகம் பார்க்கலாம். பகுத்தறிவு ஆசிரியர் அணியின் மாநிலத் தலைவராகவும் இருந்தார். வழக்காடு மன்றங்களில் நாத்திகம் பேசுவார். இன்று மேல்மருவத்தூர் அம்மா அருகில் நின்று, "பெரியார் நாத்திகராக இருந்து என்ன செய்ய வேண்டும் என்று நினைத்தாரோ, அதையேதான் பங்காரு அடிகளார் ஆன்மிகப் பணியின் மூலம் செய்து வருகிறார்" என்று பேசும் அளவுக்குக் கொள்கை வெளுத்திருக்கிறது.

'பெரும்பான்மை சமூகமான வன்னியர் கோட்டையில் மாவட்டச்செய லாளராகவும், தொடர்ச்சியாக மூன்று முறை அமைச்சராகவும் பொன்முடி ஆனதற்குப் பின்னணி, அவரது துணிச்சலும் யாருக்கும் பயப்படாமல் நினைத்ததைச் செய்யும் குணமும்தான் காரணம்' என்று தி.மு.க. வட்டாரம் சொல்கிறது.

பொன்முடி தி.மு.க-வுக்குள் தன்னை இணைத்துக்கொண்டபோது, ஒன்றுபட்ட தென் ஆற்காடு மாவட்டத்தில் செல்வாக்குப் படைத்த மனிதராக உலா வந்தவர் செஞ்சி ராமச்சந்திரன். "தலைவரே, ஒரு நிமிஷம் நில்லுங்க. நான் சொல்றதைக் கேட்டுட்டுப் போங்க" என்று கார் ஏறப் போன கருணாநிதியை இடைமறித்து சொல்லக்கூடிய துணிச்சல்காரர் அவர். அதுவே, அவருக்கு வினையானது. மாவட்டத்தை இரண்டாகப் பிரித்தார் கருணாநிதி. 'மைனாரிட்டி சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு அமைச்சர் பதவியைத் தரப்போகிறேன்' என்று தேவையான சூத்திரத்தை கருணாநிதி கையில் எடுத்தபோது தென்பட்டார் பொன்முடி. ஏராளமாகப் படித்திருக்கிறார் என்பது கூடுதல் தகுதியானது. சுகாதாரத் துறை தரப்பட்டது.



1989-ல் கட்சிக்குள் தனக்கான ஆட்களை இளைஞர் அணியில் பொறுப்பு கொடுத்து உள்ளே நுழைக்கும் காரியங்களில் ஸ்டாலின் இறங்கினார். பொன்முடியிடம் ஆள் கேட்டார் ஸ்டாலின். ஆதி சங்கரை உள்ளே நுழைத்தார் பொன்முடி. செஞ்சியாரை நேருக்கு நேராக முட்டி, தன் அஞ்சாமையை அறிவித்தார் பொன்முடி. செஞ்சியாரின் கோபம் தலைக்கேறி... வைகோவுடன் கை கோத்தார். செஞ்சியாரின் விலகல்... பொன்முடி பூத்துக் கிளம்பக் காரணம் ஆனது. ஸ்டாலினின் நெருக்கம்... கருணாநிதியுடன் இணக்கம்... இரண்டும் தலைமை வரிசையில் உட்காரவைத்தன. 'சத்யராஜ்' சிரிப்பு சிரித்தபடி வளைய வருவார் பொன்முடி. 'கலைஞருக்கு ஒரு பேராசிரியர் அன்பழகன். தளபதிக்கு ஒரு பேராசிரியர் பொன்முடி' என்று விழுப்புரம் ஆட்கள் வீரப் பட்டம் தந்தனர்.

சொந்தக் கட்சியில் மட்டுமல்ல; தி.மு.க. எதிர் அணியில் இருக்கும்போதும் சட்டசபையில் எதிர்ப்புச் சத்தம் பொன்முடியிடம் இருந்துதான் கிளம்பும். அன்பழகனும் துரைமுருகனும் பேசத் தயங்கும்போது, பொன்முடியும் பரிதியும்தான் அடங்காப் பிள்ளைகளாக எதிர் அம்பு வீசுவார்கள். பழைய வரலாற்று ஞாபகங்கள் தொடங்கி... அரசாங்க அறிவிப்புகள் வரை புள்ளிவிவரங்களுடன் பேசக்கூடிய மனிதர். இது கருணாநிதியிடம் அவருக்கு இன்னும் அதிக நெருக்கத்தை ஏற்படுத்தியது. அவரை மீறி வட மாவட்டத்தில் கருணாநிதி, ஸ்டாலினால் எதுவும் செய்ய முடியாது.

தனக்கு உயர் கல்வித் துறையைக் கொடுத்தபோது, 'என் தகுதிக்கு கல்வித் துறையை மொத்தமாகத் தராமல், அதை இரண்டாகப் பிரித்து ஒரு பாதி யைக் கொடுப்பதா?' என்று கோபம். 'கொஞ்ச காலம் பொறுய்யா' என்று சமாதானப்படுத்தினார் கருணாநிதி. துரைமுருகனுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டபோது, அவரிடம் இருந்த பொதுப் பணித் துறை இவருக்குக் கூடுதல் பொறுப்பாகத் தரப்பட்டது. ஆனால், அப்போதும் பொன்முடியை 'சுதந்திரமாக'ச் செயல்படவிடாமல் துரைமுருகன் தடுப்பதாக வதந்திகள் கோட்டையில் சுழன்றன. அதுவரை துரைமுருகனின் ஜோக் அனைத்துக்கும் சிரித்து வந்த பொன்முடி, முதல் தடவையாக முறைக்க ஆரம்பித் தார். முழு குணம் அடைவதற்கு முன்னால் எழுந்து வந்து துறை யைக் கைப்பற்றிக்கொண்டார் அவர். 'எனக்கு வேறு ஏதாவது ஒரு துறையை நிச்சயம் கொடுத் தாக வேண்டும்' என்று பொன் முடி பிடிவாதம் பிடிக்க... அடுத்தவரிடம் இருந்து எதையும் எடுக்க முடியாத கருணாநிதி, தன் வசம் இருந்த கனிம வளத்தைத் தாரைவார்த்தார். இதை வாங்கிக் கொடுக்க ஸ்டாலினைவிட அதிகத் தூண்டுதலாக இருந்தது அழகிரிதான் என்பதால், அவர் மீது இவருக்கு நெருக்கம் அதிகம் ஆனது. 'ஸ்டாலினின் முக்கியத் தூணை மதுரைஇழுத்து விட்டது' என்று வர்ணித்தனர்.



சக மந்திரிகளில் எ.வ.வேலு மட்டும்தான் பொன்முடியுடன் முழுமையாகச் சிரித்துப் பழகி, பேசிக் களித்து வருபவர். மற்றவர்கள் பொன்முடியிடம் ஏதாவது பரிந்துரை என்றாலே பயந்து நடுங்குகிறார்கள்.

விழுப்புரத்தைச் சுற்றி வந்தால், சென்னை - கும்பகோணம் நெடுஞ்சாலை கப்பிக்காம்புலியூரில் இருக்கிறது சிகா அறக்கட்டளை. ஆரம்பத்தில் இங்கு ரெசிடென்ஷியல் ஸ்கூல் மட்டும் தொடங்கப்பட்டது. சமீபத்தில் கலை அறிவியல் கல்லூரியும்,ஆசி ரியர் பயிற்சிக் கல்லூரியும் தொடங்கப்பட்டுள்ளன. சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் சூரியா அறக்கட்டளை பெயரில் பொறி யியல் கல்லூரி, பாலிடெக்னிக், நிர்வாகவியல் கல்லூரி எனப் பிரமாண்டமான கட்டடங்கள் எழுந்துவருகின்றன. பெருமுக்கல் என்ற இடத்தில் ஜல்லி உடைக்கும் நிறுவனம், காங்கிரீட் தயாரிப்பு நிறுவனம் வளர்ந்து வருகிறது. கடலூரில் ஹீரோ ஹோண்டா விற்பனையகம் உள் ளது. சிமென்ட் வர்த்தகமும் உண்டு. கல்லூரிப் பேராசிரியராக இருந்த காலத்தில் இருந்து வாடகை வீட்டில்தான் வசித்து வந்தார். இன்று விழுப்புரத்திலும், சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீராம் நகரிலும் வீடுகள் இருக் கின்றன. அந்த வீட்டு நிலம் தொடர்பான வழக்கும் நிலு வையில் உள்ளது. சென்னையில் எழும் ஹோட்டல் ஒன்றின் உரிமையாளர் இவர்தான் என்று அப்பகுதியினர் சொல்கிறார் கள்.

பொன்முடிக்கு இரண்டு மகன்கள். மூத்தவர், பொன் கௌதம சிகாமணி. அடுத்தவர், பொன் அசோக் சிகாமணி. இருவருமே டாக்டர்கள். கோவை உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு ஊர்வலத்தைப் பார்வையிடும் குஷ்புவின் மடியில் அமர்ந்திருந்த சின்னப் பெண் பெயர் கயல், கௌதம சிகாமணியின் மகள். கௌதமன் டி.வி. நிகழ்ச்சிகள் தயாரிப்பிலும் இறங்கியிருக்கிறார். வட மாவட்டத்தில் கட்சியின் முக்கியப் பிரமுகராகவும் வளர்ந்து வருகிறார். தளபதி நற் பணி மன்றம் ஆரம்பித்து இருக் கிறார். அழகிரி மன்றங்களுக்குத் தடை போட்ட தலைமை, இதைக் கண்டுகொள்ளாதது ஆச்சர்யம்தான். இவரது பெயர் இல்லாமல் மாவட்டத்தில் விளம்பரங்கள் செய்ய முடியாது. வேண்டியவர்கள், சாதிக்காரர்கள் மட்டுமே அமைச்சரால் வளர்த்துவிடப்படுவதாகக் கட்சிக்குள் பொருமல் கேட்கிறது. இது தொடர்பான எத்தனையோ புகார்கள் அறிவாலயம் வாசலைத் தட்டி இருக்கின்றன. ஆனால், கருணாநிதியின் கவனத்துக்குப் போனதாகத்தான் தெரிய வில்லை.

நுழைவுத் தேர்வை ரத்து செய்தது, கலைக் கல்லூரிகளில் ஷிஃப்ட் முறையைக் கொண்டுவந்தது, கல்லூரி மாணவர்களுக்கு இலவசப் பேருந்து அட்டை, முதுகலைப் பட்டம் வரை கல்விக் கட்டணம் ரத்து போன்றவை பொன்முடி காலத்துச் சாதனைகளாகச் சொல்லப்படும். நுழைவுத் தேர்வு ரத்து காரணமாக கிராமப்புற மாணவர்கள் 54 ஆயிரம் பேர் பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்திருப்பது முக்கியச் சாதனை. 16 நிகர் நிலைப் பல்கலைக்கழகங்களுக்கு மத்திய அரசு செக் வைத்தபோது, 'அனைத்து நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் அங்கீகாரத்தையும் ரத்து செய்ய வேண்டும்' என்று துணிச்சலாகக் குரல் கொடுத்தார் பொன்முடி. அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலையும், பல்கலைக்கழக மானியக் குழுவையும் இணைத்து தேசிய உயர் கல்வி ஆணையம் அமைக்க மத்திய அரசு முயற்சித்தபோது, 'இதனால் உயர் கல்வியில் மாநில அரசுக்கு இருக்கும் அதிகாரம் குறையும்' என்று எதிர்த்தார். ஆனால், உயர் கல்வி என்பது இன்று வைரம், வைடூரியத்தைவிட விலைமதிப்பானதாக மாறிக்கொண்டு இருப்பதை இந்த அரசு உணர்ந்ததாகத்தெரிய வில்லை.

பொறியியல் கல்லூரியில் அரசு ஒதுக்கீட்டில் இடம்கிடைத் தால், 32 ஆயிரம் ரூபாயும், நிர்வாக ஒதுக்கீடாக இருந்தால் 62 ஆயிரத்து 500 ரூபாயும்தான் வசூலிக்க வேண்டும் என்கிறது அரசு உத்தரவு. இது மெகா பொய் என்பதை பொறியியல் படிக்கும் மாணவனின் குடும்பங்கள் அறியும். தமிழகத்தில் இருக்கும் 350-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் அதிகபட்சம் ஆறு லட்சம் வரைக்கும் சில பாடங்களை பெற தர வேண்டியுள்ளது. இதை உயர் கல்வித் துறை கண்டுகொள்வதே இல்லை.

"உயர் கல்வியைக் குறைந்த செலவிலும் அனைவருக்கும் வாய்ப்பு அளிக்கும் வகையிலும் வழங்குவதன் மூலமே உயர் கல்வியில் மொத்த மாணவர் சேர்க்கை விகிதத்தை அதிகப்படுத்த முடியும்" என்று சட்டசபையில் பொன்முடி சொன்னார். ஆனால், நடைமுறையில் அதை அமல்படுத்த எதையும் செய்ததாகத் தெரியவில்லை. கல்வித் தந்தைகளின் பண பலத் துக்கு முன்னால் எந்தக் கல்விக் கொள்கையும் கரைந்துபோகும் என்பதற்கு பொன்முடி மட்டும் விதி விலக்காக இருக்க முடியுமா என்ன?

பல்கலைக்கழகத் துணைவேந்தர்களே பல்வேறு சர்ச்சைகளில் மாட்டினார்கள். 'அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் எங்களுக்கு இல்லை' என்றார் அமைச்சர். நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் இல்லாமல் இருக்கலாம். ஆனால், நல்லவரை நியமிக்கும் பொறுப்பு இருக்கிறதே? கவர்னர் மாளிகையில் அமைந்திருக்கும் 'மூவர் அணி' மன்னர் ஆட்சி மாதிரி கொழிப்பதை யாராலும் தடுக்க முடியவில்லையே? பட்டமளிப்பு விழாக்களில் கலந்துகொள்வதும், கவுன்சிலிங் சீஸனும் மட்டுமே உயர் கல்வித் துறையின் வேலைகள் என்று யார் வரையறுத்தது?

விழுப்புரத்தில் அண்ணா அறிவாலயம் திறக்கப்பட்டது. தங்க முலாம் பூசிய நினைவுப் பரிசை கருணாநிதிக்கு வழங்கினார் பொன்முடி. 'இதில் பெரியாரும் அண்ணாவும் இருக்கிறார்கள். இல்லையென்றால், கீழே தூக்கிப் போட்டிருப்பேன்' என்றார் கருணாநிதி. நம்மைவிட இன்னும் எவ்வளவோ அறிந்தவர் அவர்தானே!

தமிழரசி


புதுச் சேலையுடன் புறப்பட்டு வாசலுக்கு வந்தார் தமிழரசி. காத்திருந்த வாகனத்தில்
பின்பக்கமாகப் போய் உட்கார்ந்தார். 'மேடம்... நீங்க முன்னாடி உட்காருங்க மேடம்' என்று பாதுகாவலர் பவ்யமாகச் சொன்னார். 'எனக்கு முன் சீட்ல உட்கார்ந்து பழக்கம் இல்லீங்க. நீங்க யாராவது உட்கார்ந்துக்கோங்க' என்று அதைவிடப் பவ்யமாகப் பதில் அளித்தார் அமைச்சர்.

'இல்ல மேடம், நீங்கதான் முன்னாடி உட்காரணும்' என்று சொல்லப்பட்டது. பயந்தபடியே முன் பக்கம் போனவர், இருக்கையின் ஓரத்தில் ஒண்டிக்கொண்டார். 'எனக்கு எதுக்குங்க இவ்வளவு பெரிய காரு?' என்று சொல்லிக்கொண்டார். வாகனம் புறப்பட்டது. சென்னையின் நெரிசலான அடையாறு பகுதியில் சைரன்கள் முழங்கப் பறந்தது. தன்னை மறந்துபோக ஆரம்பித்தார். இந்த நான்கு ஆண்டு காலமும் அவருக்குக் கனவு உலகத்தில் மிதப்பதுபோலத்தான் இருக்கிறது.

பரமக்குடியில் மிகச் சாதாரணக் குடும்பத்தில் பிறந்த தமிழரசி, மதுரை நாகனாகுளத்தைச் சேர்ந்த ரவிக்குமாரைக் கரம் பற்றும்போதுதான் அரசியல் காற்றும் லேசாகப்பட்டது. அப்போது ரவி, பால் வியாபாரத்தில் இருந்தார். தி.மு.க. மாவட்டச் செயலாளராக இருந்த மூர்த்தி (சோழவந்தான் எம்.எல்.ஏ.) கண்ணில் சுறுசுறுப்பான வாலிபராக ரவி அறிமுகமானார். தி.மு.க. இளைஞர் அணியின் ஒன்றியத் துணை அமைப்பாளர் பதவி தரப்பட்டது. உள்ளாட்சித் தேர்தல் வந்தபோது, இவர் குடியிருந்த மதுரை மேற்கு ஒன்றிய பெண் கவுன்சிலருக்கான ஒரு வார்டுக்கு ஆள் சிக்கவில்லை. 'தமிழரசிக்கு அந்த வாய்ப்பைக் கொடுங்களேன்' என்று மூர்த்தியிடம் சொன்னார் ரவி.

மிக மிக ஒல்லியாக வந்து நின்ற தமிழரசியைப் பார்த்த மூர்த்தி, "கவுன்சிலர் ஆகுறதுன்னா ஓரளவு படிச்சிருக்கணுமே... உனக்கு எழுதப் படிக்கத் தெரியுமா?" என்று இழுத்தார். "நல்லா எழுதுவேன்... படிப்பேன்" என்று ஆங்கிலத்தில் தமிழரசி பதில் அளித்தபோது அதிர்ந்துபோனது மூர்த்தி மட்டுமல்ல; கணவர் ரவிக்குமாரும்தான். பி.காம்., பாடத்தில் அதிக மதிப்பெண்கள் வாங்கித் தேறியவர் தனது மனைவி என்பதை அப்போதுதான் ரவியே அறிந்துகொண்டார். கவுன்சிலர் ஆனார் தமிழரசி. ஒன்றியத் தலைவராகவும் ஆனார். அந்த ஒன்றியத்தில் இருந்த 16 கவுன்சிலர்களில் பெரும்பான்மையை வைத்திருந்தது அ.தி.மு.க. அவர்கள்தான் வெற்றிபெற்றிருக்க வேண்டும். ஆனால், இரட்டை இலைப் பிரமுகர் ஒருவர் தனது கொழுந்தியாளுக்கு அந்தப் பதவியைக் கேட்க, மேலிடம் மறுத்ததால்... அந்தப் பக்கம் இறக்கம் ஏற்பட்டு, தமிழரசி தலைவர் இருக்கையைக் கைப்பற்றினார்.

2006 தேர்தல் வந்தபோது, சமயநல்லூர் தொகுதியை தமிழரசிக்காகக் கேட்டார் மூர்த்தி. அழகிரியும் இதை ஏற்றார். தலைமை யின் நேர்காணலில் எவ்வளவு செலவு செய்வீர்கள் என்ற கேள்வி வந்தபோது, தலைவரே அதிர்ந்துபோகும் அளவுக்கு ஒரு தொகை யைச் சொல்லி, ஆதாரம் காட்டியதாக தமிழரசியைப் பற்றி மதுரையில் கதைகள் உலவுகின்றன. வெற்றியும் பெற்றார். 'மதுரையில பி.டி.ஆருக்கு மந்திரிப் பதவி கொடுக்கணும்... நீ இன்னொரு ஆளைச் சொல்லு' என்று கருணாநிதி கேட்க.... அப்போதும் மூர்த்தியைப் பார்த்தார் அழகிரி. அவர் தமிழரசியைக் கை காட்டினார். 'படிச்ச பொண்ணாய்யா?' என்று கேட்டிருக்கிறார் கருணாநிதி. 'டிகிரி இருக்கு... போதும்ல' என்றார் அழகிரி. இதெல்லாம் தெரியாமல், கணவருடன் சென்னைக்கு வந்து இறங்கினார் தமிழரசி.

டி.வி-யில் அமைச்சரவைப் பட்டியலில் யார் யார் பெயர்கள் இருக்கின்றன என்ற தகவல் ஓடியது. தமிழரசி என்ற பெயரைப் பார்த்ததும் சந்தோஷத்தில் பதறிப்போனார் தமிழரசி. ஆட்டோ பிடித்து அறிவாலயம் வந்து.... தலைவரைப் பார்த்து... கவர்னர் மாளிகை போய்... ஸ்கார்பியோ காரில் உட்கார்ந்தபோதுதான் முதல் பாராவில் சொன்ன சம்பவம் நடந்தது. இப்போது மூர்த்திக்கும் அவருக்கும் முறையான பேச்சுவார்த்தை இல்லை. தமிழரசி மாறிவிட்டாரா, அல்லது மூர்த்தி மரியாதைக் குறைவாக நடத்தினாரா என்ற விசாரணையில் கிடைப்பவை சில்லியான சம்பவங்கள். 'அரசியல்ல தன்னை யாரு வளர்த்துவிட்டாங்களோ... அவரையே ஒதுக்கிவெச்சிட்டாங்க. அன்னிக்கு மூர்த்தி அண்ணன் இவங்க பேரைச் சொல்லலேன்னா, தமிழரசி சட்டசபையில் ஏதோ ஒரு மூலையிலதான் உட்கார்ந்திருக்கும்' என்று மூர்த்தியின் ஆட்கள் சொல்கிறார்கள். 'மந்திரி ஆன பிறகும் பழைய மாதிரியே மூர்த்திக்குக் கை கட்டிச் சேவகம் பார்க்க முடியுமா?' என்று தமிழரசிக்கு நெருக்கமானவர்கள் வருந்துகிறார்கள். ஒரு பதவி, ஒரு நட்பை உடைத்துவிட்டது.

அழகிரியிடம் இருந்து தமிழரசியைப் பிரித்துவிட வேண்டும் என்று ஒரு குரூப் கங்கணம் கட்டிச் செயல்படுகிறது. ஆனால், 'அக்கா.... அக்கா' என்று காந்தி அழகிரியிடம் இவர் நெருக்கமாக இருப்பதால், எந்தச் சிக்கலும் இல்லை. கடந்த 4-ம் தேதி அமெரிக்காவுக்கு அழகிரி சென்றபோது, விமான நிலையத்தில் கடைசி வரிசையில் தமிழரசி காத்துஇருக்க.... 'எங்க அந்தம்மாவைக் காணோம்?' என்று வரச் சொல்லி... தமிழரசியிடம் பேசிவிட்டுத்தான் போனார். தமிழக அமைச்சரவையில் தலையை ஒரு பக்கமும், வாலை மறுபக்கமும் காட்டிக்கொண்டு இருக்கும் பலர் மத்தியில், தன்னை மட்டுமே நம்பி இருக்கும் இருவரில் ஒருவர் தமிழரசி என்பதால்தான் அழகிரியின் மனதில் தனி இடம்.

ஆரம்ப காலத்தில் தமிழரசியை ஓர் அப்பாவி என நினைத்தவர்களுக்கு மத்தியில் இன்று சொல்லப்படும் கதைகள், மலைப்பை ஏற்படுத்துகின்றன. மதுரை அண்ணா நகர், கே.கே. நகர் பகுதியில் சிலபல வீடுகளும்... அலங்காநல்லூர் கோம்பக்காடு நிலமும், பாலமேடு பகுதிக் காடும் கவனிக்கப்படுகின்றன. கணவர் ரவிக்குமார் சில கான்ட்ராக்ட்டுகளைக் கறாராகப் பேசுவதாகவும், சதவிகிதக் கணக்குகள் சளைக்காமல் போடப்படுவதாகவும் கிசுகிசுப்புகள். அந்த வட்டாரத்து எம்.எல்.ஏ. ஒருவரின் மனைவியே இந்தக் கதைகளை 'மதுர' குலுங்கச் சொல்லிப் புகைகிறார்.

பழைய பி.காம்., பெண்ணாக இல்லாமல், பாரம்பரிய அரசியல்வாதியாகவே தமிழரசியை இப்போது பார்க்க முடிகிறது. ஒடிசலான உடல், ஒட்டிய கன்னம், எளிமையான சேலை, எதற்கும் பயந்த கண்கள் என வலம் வந்தவர், இன்று சபையில் அனைவருக்கும் சமமாக நிற்கிறார். சட்டசபையில் சரளமாகப் பேசுகிறார், மானியக் கோரிக்கை விவாதங்களுக்குப் பதில் அளித்து மணிக்கணக்கில் உரையாற்றுகிறார், மதுரையில் யார் எங்கு தேதி கேட்டாலும், போய் அறிவுரைகளை அள்ளித் தெளிக்கிறார். 'பெண்கள் நிறையப் படிக்க வேண்டும். எல்லாச் சாதிப் பெண்களும் அடிமைகள்தான். கல்விதான் அவர்களை மாற்றி அமைக்கிறது' என்று பாத்திமா கல்லூரியில் பாடம் எடுக்கிறார். 'மனிதர்களை நெறிப்படுத்த தெய்வ வழிபாடு தேவை' என்று அகில பாரத ஐயப்ப சேவை சங்க விழாவில் மனம் உருகிச் சொல்கிறார். ஆனாலும், இவரை ஒரு பிம்பம் மிரட்டிக்கொண்டே இருக்கிறது.

'மந்திரி ஆகி வந்ததுமே, அழகிரியுடன் இருக்கும் முக்கியமான நபர் கூப்பிட்டு, 'யார் எந்தப் பரிந் துரை செய்தாலும், இங்கே தகவல் சொல்லாமல் செய்யக் கூடாது'ன்னு சொல்லிட்டார். அதனால், யாருக்கு லெட்டர் பேடில் பரிந்துரை கொடுத்தாலும் அதைக் குறிச்சுவெச்சிருந்தாங்க. முதல் ஒரு வருஷம் சென்னைக்குப் போறதும் மதுரைக்கு வர்றதுமாத்தான் இருந்தாங்க. அதுக்குப் பிறகுதான் தன்னுடையதுறை யைப்பத்தியே யோசிக்க ஆரம்பிச்சாங்க' என்கிறார் மதுரைக்காரர் விவரமாக. தலித் பெண்கள் 100 பேருக்கு ஆண்டுதோறும் விமானப் பணிப்பெண் பயிற்சி தரப்படும் என்கிற அறிவிப்பு, 'தமிழரசி கொஞ்சம் வித்தியாசமானவர்போல' என்றுகவனிக்க வைத்தது. தையல் பயிற்சி, பிளாஸ்டிக் வொயர் கூடைப் பயிற்சி என்று அறிவிப்பவர்களுக்கு மத்தி யில், இந்த அறிவிப்பு வியப்புக்கு உரியதாகவும் அமைந்தது. அந்தத் திட்டத்துக்காக ஆண்டுதோறும் பணம் ஒதுக்கினார், பயிற்சிகள் கொடுத்தார். படித்துவிட்டு வெளியே வந்தார்களே தவிர, அவர் களுக்கு வேலை வாங்கித் தரும் முறையானநடவடிக் கைகள் எதுவும் இல்லாமல் அத்திட்டமே முடங்கிப் போனது.

அனைவருக்கும் கல்வித் திட்டம், மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, இலவசப் புத்தகம், நோட்டு கள், மிதிவண்டி, சீருடைகள், விடுதிகள், இலவச உணவு, சிலேட்டுகள் என்று ஆதிதிராவிட மக்களுக்கு அடிப்படை வசதி வாய்ப்புகளுக்கு உத்தரவாதம் தரும் துறையாக இது இருக்கிறது. அருந்ததிய மக்களுக்கு, கல்வி, வேலைவாய்ப்பில் மூன்று சதவிகித இடஒதுக்கீடு வழங்கப்பட்டது சமூக நீதி வரலாற்றில் மிக முக்கியமான நிகழ்வு.மிகமிக அடித்தட்டில் இருந்த அந்தச் சமூகத்துக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டதால் மட்டுமே, இந்த ஆண்டு 56 அருந்ததிய மாணவர்கள் மருத்துவத்திலும், 1,156 பேர் பொறியியல் கல்லூரிகளிலும் சேர்ந்திருக்கிறார்கள். புதிரை வண்ணார் என்ற புறக்கணிக்கப்பட்ட சாதிக்கு நல வாரியம் அமைத் ததும், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை, இலக்கிய மேம்பாட்டு அமைப்பு தொடங்கப் பட்டு இருப்பதும் மிக முக்கியச் சாதனைகள். ஆனால், குறைகள் என்று யோசித்தால்....

ஆதி திராவிடப் பள்ளிகளும் விடுதிகளும் கூவத்தைவிடக் கேவலமான, பரிதாபமான நிலைமையில்தான் பெரும்பாலான இடங்களில் உள்ளன. பல பள்ளிகளுக்கு ஒழுங்கான கட்டடங்கள் இல்லை. அங்கு சமைக்கும் சாப்பாடு வாயில் வைக்க முடியாத அளவு மோசம். அப்பள்ளி மாணவர்களைக் கூலிக்காரர்களைப்போல நிர்வாகிகள் நடத்துகிறார்கள். விடுதிப் பொறுப்பாளர்கள், உதவியாளர்கள், சமையல்காரர்கள் என்ற முக்கூட்டுக் கொள்ளையில் சிக்கி, அப்பாவி மாணவர்கள் சீரழிவதைக் கவனிக்க யாரும் இல்லை. சேலம் மாவட்டம் மேட்டூரில் வாடகைக் கட்டடத்தில் ஆதி திராவிடர் மாணவியர் விடுதி இருந்தது, அதற்குச் சரியாக வாடகை கொடுக்காததால், ஒரு மத்தியான நேரத்தில் பிள்ளைகளை விரட்டிப் பட்டினி போட்டுவிட்டார்கள். அந்த நேரத்தில் செம்மொழி மாநாட் டைக் கொண்டாடுவது தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் இருந்தார் தமிழரசி. இன்று கட்டப்படும் தொகுப்பு வீடுகள் 10 ஆண்டுகள்கூட ஒழுங்காக இல்லாமல், ஒழுகும் வீடுகளாக இருக்கின்றன. அதுவும் ஊருக்கு ஒதுக்குப்புறமாக, அப்படியே ஒதுக்கிவிட வசதியாகவே இந்த வீடுகள் கட்டப்படுகின்றன.

தலித்துகள் மீது அதிகப்படியான தாக்குதல்கள் நடக்கும் மாநிலங்களில் இந்திய அளவில் ஐந்தாவது இடத்தில் இருக்கிறது தமிழகம். இரட்டைக் குவளை முறை இன்னமும் இருக்கிறது, கோயிலுக்குள் நுழைய மறுக்கப்படுகிறார்கள், பொதுப் பாதையைப் பயன்படுத்தத் தடை இருக்கிறது, செத்தால்கூட தனி மயானம்தான். ஆனால், இது குறித்தெல்லாம் இந்தத் துறை கவலைப்படுவதாகத் தகவல் இல்லை.

வன்கொடுமைச் சட்டத்தின்படி முதலமைச்சரைத் தலைவராகக்கொண்ட கண்காணிப்புக் குழு அமைக்க வேண்டும். அது எத்தனை முறை கூடியது? வன்கொடுமைச் சட்டப்படி பதிவாகும் வழக்குகளை விசாரிக்க மாவட்டம்தோறும் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும். ஆனால், அவை தமிழ்நாட்டில் நான்கு மாவட்டங்களில்தான் இருக்கின்றன.

ஆதிதிராவிடர்கள் தாங்கள் வாழும் பகுதியில் எத்தனையோ வகையான கொடுமைகளை அனுப வித்தாலும், அவை காவல் நிலையங்களில் வழக்கு களாகப் பதிவாவது இல்லை. ஆங்கிலேயர் காலத் தில் தரப்பட்ட 12 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலத்தில் இப்போது 3,000 ஏக்கர் நிலம் மட்டுமே அந்த மக்கள் வசம் உள்ளது.

இந்தக் குறைகளைப்பற்றி எல்லாம் அம்பேத்கர் விருது வழங்குபவர்களும் கவலைப்படவில்லை; வாங்குபவருக்கும் கவலை இல்லை. அல்லது அதைக் கையில் எடுத்துச் செய்துகாட்டக்கூடியவரையும் அமைச்சராக நியமிக்கவில்லை.

6.24 கோடிப் பேரில், 1.18 கோடி மக்களைக் கவனித் துக் கை தூக்கிவிட வேண் டிய துறையை, சலுகை கொடுப்பதாக இல்லாமல் சுதந்திரமாக அதிகாரம் செலுத்துவதாக மாற்றினால்தான் அர்த்தம் இருக்கும். இல்லை என்றால், 'நானும் மந்திரியா இருந்தேன்' என்பது மட்டுமே தமிழரசி யின் தனிப் பெருமையாக இருக்கும்!

கே.என்.நேரு


"பெரிய மீசை வைத்திருப்பவர்கள் எல்லாம் கட்டபொம்மன் ஆகிவிட முடியாது" - என்று சட்டமன்றத்தில் எகிறினார் நத்தம் விஸ்வநாதன். அவர் போக்குவரத்துத் துறையின் முன்னாள் அமைச்சர்!

"உங்களுக்கு மீசை வளரவில்லை என்றால், நானா பொறுப்பு?" என்று பதில் அளித்தார் கே.என்.நேரு. இப்போதைய போக்குவரத்துத் துறை அமைச்சர்!

அண்ணன் அமைதியாகப் பதில் அளித்தது பலருக்கும் ஆச்சர்யம். அது, அவரது ஒரிஜினல் முகம் அல்ல. சக மந்திரியாக இருந்தாலும், சாதாரணத் தொண்டராக இருந்தாலும், நேருவின் மீசை ஆளை மிரட்டும்... விரட்டும். அப்படி ஓர் ஆளுமைகொண்ட நேரு, ஆரம்ப காலத்தில் அப்படி இல்லை.

லால்குடி தொகுதிக்கு உட்பட்ட காணக்கிளிய நல்லூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் நேரு. விவசாயக் குடும்பம். தேசம் அறிந்த தலைவரான ஜவஹர்லால் நேருவைப்போல வர வேண்டும் என்பதற்காக நேரு என்று பெயரைவைத்தார் அப்பா. பி.யூ.சி., வரை படித்த நேரு, அரிய நல்லூரில் மிளகாய் மண்டி வைத்தார். பிறகு, புள்ளம்பாடியில் பால் சொசைட்டி. கையில் பணமும் சுற்றுவட்டாரத்தில் கொஞ்சம் அறிமுகமும் கிடைத்ததும் அரசியல் ஆசை வந்தது. அந்த நேரத்தில்தான் உள்ளாட்சித் தேர்தலை நடத்த, அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆரும் முடிவெடுத்து இருந்தார். புள்ளம்பாடி யூனியன் தலைவர் பதவிக்கு தி.மு.க. சார்பில் தேர்தலில் நின்றார். தேர்தல் நடத்திய எம்.ஜி.ஆர். முழுமையாகத் தோற்று... அதுவரை தொடர் தோல்வியில் இருந்த தி.மு.க. மொத்தமாக வெற்றிபெற்ற தேர்தல் அது. சுமார், 10 ஆண்டு காலம் முடங்கிக்கிடந்த கட்சி மீண்டும் செழிக்க ஆரம்பித்தது. ராஜீவ் காந்தி பிரதமராக இருந்து நகர்பாலிகா என்று ஏராளமான பணத்தை உள்ளாட்சி அமைப்புகளுக்குத் திருப்பிவிட்ட காலமும் அதுதான்.

பிரதமரை திருச்சியில் சந்திக்கும் வாய்ப்பு நேருவுக்குக் கிடைத்தது. "உங்கள் தாத்தா பெயரைத்தான் எனக்கு வைத் திருக்கிறார்கள்" என்று சொல்லி, பிரத மரின் கவனத்தைக் கவர்ந்த நேரு, தன் யூனியனுக்குப் பணம் கிடைக்க ஏற்பாடு செய்துகொண்டார். அதனால், அந்தப் பகுதியில் செல்வாக்கு உயர்ந்தது. அடுத்த மூன்று ஆண்டுகளில் சட்டசபைக்குத் தேர்தல். எம்.எல்.ஏ. ஆசை துளிர்த்தது. அப்போது, திருச்சி மாவட்ட தி.மு.க. செயலாளராக இருந்தவர் செல்வராஜ். (இன்றைய வனத் துறை அமைச்சர்). அவரே 'ஓனர்' என்று தீனதயாளன் ரெட்டியார் என்பவரை அழைப்பார். அந்த ரெட்டியாரை நேரு பிடித்தார். 'ஓனர்' சொன்னதற்குப் பிறகு மறுக்க முடியாது என்பதால், லால்குடி தொகுதியை நேருவுக்குத் தாரை வார்த்தார் செல்வராஜ். சொந்த செல்வாக்கும் சாதி வாக்காளர்களின் உதவியும் நேருவை வெல்லவைத்தது.

நல்ல காலம் நேருவுக்கு ஆரம்பித்தது. அமைச்சர் பதவியைப் பங்கிடும் சதுரங்கத்தில் சத்தம் இல்லாமல் நேரு நுழைகிறார். திருச்சி மாவட்டத்தில் செல்வாக்கான செல்வராஜ், முசிறி தொகுதியில் தோற்கிறார். அவருக்கு அடுத்ததாக செல்வாக்கான மலர்மன்னனுக்கு மந்திரி பதவி தரக் கூடாது என்று கருணாநிதியின் இளமைக் கால நண்பர் அன்பில் தர்மலிங்கம் தடுக்கிறார். அன்பில் பொய்யாமொழிக்குத் தரலாமா என்று யோசித்தால், முக்குலத்தோர் பிரதிநிதித்துவம் ஏற்கெனவே எகிறிக்கொண்டு இருந்தது. அப்படியானால்... என்று தேடியபோது, தெரிந்தவர் நேரு. மின் துறை அமைச்சராக நேரு இணைந்தார்.

வைகோ பிரியும்போது செல்வராஜும் மலர்மன்னனும் பிரிந்தார்கள். நேருவுக்குத் தடையாக இருந்த இரண்டு மலை முகடுகள் தகர்ந்தன. அன்பில் பொய்யாமொழியின் அகால மரணம்... அவர் தாண்டியாக வேண்டிய கடலை வற்றவைத்தது. 'நான் அடிமை அல்ல' என்று சொல்லும் ஒரே ஆளாக திருச்சி என்.சிவா மட்டும்தான் இருக்கிறார். அடுத்த இரண்டாம் கட்ட ஆட்களாக வலம் வரும் எம்.எல்.ஏ-க்கள் அன்பில் பெரியசாமி, கே.என்.சேகரன், துணை மேயர் அன்பழகன் ஆகிய மூவரும், நேரு காரின் பின் இருக்கைத் தம்பிகளாக மாறினார்கள்.

அண்ணன் அழகிரியாக இருந்தாலும், தம்பி ஸ்டாலினாக இருந்தாலும், இருவருக்கும் நெருக்கமானவர் நேரு. இந்த இரட்டை நிலையை அழகிரி விரும்பவில்லை. எனவே, இப்போதைய மத்திய அமைச்சரான நடிகர் நெப்போலியனை திருச்சியின் தளபதியாக ஆக்க விரும்புகிறார் அழகிரி.

நேரு என்றால் கருணாநிதிக்கும் தனிப் பிரியம். அதை அதிகப்படுத்திக் காட்ட நேரு எடுத்த முயற்சிதான் திருச்சியில் திறக்கப்பட்ட 'கலைஞர் அறிவாலயம்'. திறப்பு விழா ரிப்பனை வெட்ட, கருண£நிதி கையில் தரப்பட்டது தங்கக் கத்தரிக்கோல். ஆனால், அது வெட்டவில்லை. இரும்புக் கத்தரிக்கோலைக் கேட்டு வாங்கினார் கருணாநிதி. அது வெட்டியது. "ஏழைகளுக்காகக் கட்டும் மாளிகையில் இரும்புக் கத்திரிக்கோல்தான் பயன்படுத்த வேண்டும்" என்றார் கருணாநிதி. அந்த அளவுக்குச் செல்வம் பெருகிய குடும்பமாக இன்றைக்கு நேரு வளர்ந்துவிட்டார். அவருக்கு இரண்டு கைகளாக இருப்பது அவரது தம்பிகள் ராமஜெயமும் ரவிச்சந்திரனும்.

ராமஜெயம், திருச்சியில் இருக்கிறார். மணல் மற்றும் கிரானைட் தொழிலில் மத்தியத் தமிழ்நாட்டில் முக்கியப் பிரமுகர். இந்தோனேஷியாவில் இருந்து நிலக்கரி வாங்கிய விவகாரத்தில் இவரை இணைத்து அறிக்கை மூலமாக ஜெயலலிதா குற்றம் சாட்டும் அளவுக்கு ராமஜெயத்தின் வளர்ச்சி இருந்தது. கனிமொழி, கருணாநிதிக்கு நெருக்கமானவராகவும் கட்சி வட்டாரம் இவரைச் சொல்கிறது. பெரம்பலூர் எம்.பி. தொகுதியை ராமஜெயத்துக்கு வாங்கிக் கொடுக்க விரும்பினார். மருமகன் நெப்போலியன் மல்லுக்கு நின்றார். நெப்ஸ§க்கு கருணாநிதி வாய்ப்பு வழங்க, இன்னமும் அந்த மோதல் கனன்றுகொண்டே இருக்கிறது. தொழில், சம்பாத்தியம் என இருந்தாலும் அதைக் காப்பாற்றிக்கொள்ள ஏதாவது பதவி வாய்ப்பை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார் ராமஜெயம். அவரும் அவரது உறவினரான வினோத் என்பவரும்தான் நேருவின் கல்லாப் பெட்டிகள்.

அடுத்த தம்பி, என்.ரவிச்சந்திரனின் பெயரைவிட, அவர் நடத்தி வரும் ட்ரூ வேல்யூ ஹோம்ஸ், பல்வேறு மாநகரங்களை வளைத்து வருகிறது. சுருக்கமாக, டி.வி.ஹெச். சிறு வீடுகள் கட்டித்தரும் சிறு நிறுவனமாக வளர்ந்த இது, சமீபத்தில் வாங்கியுள்ள இடங்கள் கோடிகளைத் தாண்டியவை. 'தி பிக்கஸ்ட் டீல்' என்று ஆங்கிலப் பத்திரிகைகளே வர்ணிக்கும் இடங்கள் இதன் வசமாகி உள்ளன. சமீபத்தில் நடந்த ஒரு விழாவில் 'தென்னிந்தியக் கட்டுமானச் சந்தையில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 750 மில்லியன் டாலர் முதலீடு செய்யப்போகிறோம்' என்று அந்த நிறுவன அதிகாரி அறிவித்து இருக்கிறார். 750 மில்லியன் டாலர் என்பது எத்தனை கோடிகள் என்பதை உடன்பிறப்புகள் யாரிடமாவது கேட்டுத் தெரிந்துகொள்ளலாம்.

"சேகரிப்பதில் மட்டுமல்ல; செலவழிப்பதிலும் நேரு தேர்ந்தவர். போக்குவரத்துத் துறையில் ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களில் பெரும்பாலானவை கட்சியினர் கொடுத்த பரிந்துரைப்படி செய்து கொடுத்ததால், அவரை நிர்வாகிகளாகிய நாங்கள் யாரும் குறை சொல்வது இல்லை" என்று பொறுப்பாளர் நற்சாட்சிப் பத்திரம் படிக்கிறார்.

ஆம், நேருவின் காலத்தில், ஓட்டுநர்களாக கடந்த நான்கு ஆண்டு காலத்தில் 8 ஆயிரத்து 372 பேரும், நடத்துநர்களாக 5 ஆயிரத்து 991 பேரும் நியமிக்கப்பட்டு உள்ளார்கள். 'தி.மு.க. உறுப்பினர் கார்டு வைத்திருப்பவர்களுக்குத்தான் வேலை தரப்பட்டது. இதில் பணம் விளையாடியது' என்று கம்யூனிஸ்ட் தொழிற்சங்கத்தினர் தொடர்ந்து புகார் சொல்லி வருகிறார்கள். புதிதாக 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் வாங்கப்பட்டன. "இதில் 5 ஆயிரம்தான் புதிய வழித்தடத்தில் ஓடுபவை. மற்ற பேருந்துகள் ஏற்கெனவே இருந்ததைக் கழித்துவிட்டு புதிதாக வாங்கப்பட்டவை" என்று சொல்லப்படுகிறது. 'இத்தனை பேருந்துகளை வாங்கி ஓட்டினாலும் இன்னமும் போக்குவரத்துத் துறை நஷ்டத்தில் இயங்குவதற்கு என்ன காரணம்? கூடுதல் வருமானம் எல்லாம் பைபாஸ் வழியாக எங்கு போகிறது?' என்று சட்டமன்றத்தில் அ.தி.மு.க. சார்பில் நத்தம் விஸ்வநாதன் கேள்வி எழுப்ப, 'விஸ்வநாதனுக்கு இதைப்பற்றிப் பேச அருகதை இல்லை. இந்த ஆட்சியில் பயணிகள் அதிகம். அதனால், வருவாயும் அதிகம். செலவுகளும் அதிகம்' என்று லாஜிக் சொன்னார் நேரு. இது புதிய பொருளாதாரத் தத்துவமாகவே இருந்தது.

"புதிய பேருந்துகளை இயக்கியது, சொகுசுப் பேருந்துகள் மற்றும் தாழ்தளப் பேருந்துகள் வாங்கியது, வேலைவாய்ப்பை அதிகரித்தது, காலி இடங்களை நிரப்பியதுபோன்ற காரணங்களால் போக்குவரத்துத் துறை நஷ்டத்தில் இயங்குகிறது" என்று நேரு காரணம் சொன்னாலும், சாதாரணமாக 10 பேருந்துகள் வைத்திருக்கும் தனியார் முதலாளி ஆறு மாதங்களுக்குள் கொழிப்பதும், 19 ஆயிரம் பேருந்துகள் வைத்திருக்கும் நிறுவனம், நஷ்டக் கணக்கைக் காட்டிவருவதும் யதார்த்தத்தில் இடிக்கவே செய்கிறது.

மத்திய தர வர்க்கத்தினர் அதிகம் வாழும் இந்த நாட்டில், ஒரு நாளைக்குச் சுமார் 11 கோடி ரூபாய் பணம் போக்குவரத்துத் துறைக்கு வசூல் ஆகிறதாம். 'நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு, கட்டணத்தை உயர்த்தவே இல்லை' என்று தி.மு.க. அரசு சொல்கிறது. ஆனால், பொதுமக்கள் சொல்வது, 'சாதாரண பஸ்களில் கட்டணத்தை ஏத்தலை. சொகுசு, தாழ்தளம்னு சொல்லி புதுப் புது பஸ்களை விடுறாங்க. அதனால், அதிகக் கட்டணத்தைக் கொடுத்துதான் நாங்க போக வேண்டி இருக்கு' என்கிறார்கள். பஸ் கட்டணத்தையும் உயர்த்தவில்லை. பணமும் அதிகமாகச் சேருகிறது என்பது நேரு பிளானாக இருக்கிறது. (சென்னையில் சாதாரணப் பேருந்துகள் - 856, எம் சர்வீஸ் - 506, எல்.எஸ்.எஸ். 735, எக்ஸ்பிரஸ் - 243, குளிர்சாதனம்கொண்டது - 10)

பொதுமக்களின் போக்குவரத்துக் கோரிக்கைகளை ஆய்வு செய்ய வல்லுநர் குழு அமைக்கப்படும் என்றார். அதன் செயல்பாடுகள் வெளியில் தெரியவில்லை. போக்குவரத்துப் பணியாளர்களுக்குப் பயிற்சி அகாடமி ஆரம்பிக்கப்படும் என்றார். அதற்கான பணிகள் தொடரவில்லை. போலி லைசென்ஸ்களைக் கட்டுப்படுத்த ஸ்மார்ட் கார்டு கொண்டுவந்துவிட்டோம் என்று சொல்லி, இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்னமும் கார்டு யாருக்கும் கிடைக்கவில்லை. அனைத்துக்கும் மேலாக, கருணாநிதி தன்னுடைய சாதனையாகச் சொல்வது, பேருந்துகளை நான்தான் அரசுடைமை ஆக்கினேன் என்பது. அவர் முதல் தடவை முதல்வராக வந்தபோது, டி.வி.எஸ்., எஸ்.ஆர்.வி.எஸ், ராமன் அண்ட் ராமன், சக்தி விலாஸ், ஏ.பி.டி. ஆகிய பெருமுதலாளிகளின் வசம் இருந்த வாகனங் களைப் பறித்து அரசுடைமை ஆக்கினார். ஆனால், இன்று தமிழ்நாட்டின் நிலைமை என்ன? கோயம் பேடுக்குப் போய்ப் பார்த்தாலே தெரியும். மெகா, மொடா பஸ்களைப் பார்க்கவே பயமாக இருக்கிறது. ஆனைமலை மாதிரி தனியார் நிறுவனங்கள் ஒவ்வொன்றும் எத்தனை பேருந்துகள் வைத்திருக்கின்றன? அரசு விரைவுப் பேருந்தாக ஓடுபவை 900-தான் என்கிறார்கள். ஆனால், தனியார் ஆம்னிகள் எத்தனை ஆயிரம் இருக்கும்? இவர்கள் நிர்ணயிக்கும் விலைகள், பண்டிகைக் காலங்களில் அவர்களாகவே ஏற்றிக்கொள்ளும் விலைகள்... இதைத் தடுக்க வேண்டிய பொறுப்பும் போக்குவரத்து அமைச்சருக்குத்தானே இருக்கிறது. ஆனால், தனியார் கம்பெனிகளுக்கு மறைமுக ஆதரவே மந்திரி ஆட்கள்தான் என்பதை யார் மறுக்க முடியும்?

போக்குவரத்துத் துறையைப் பொதுமக்கள் துறையாக மாற்றியாக வேண்டும் என்ற கவலைகளைவிட, அழகிரி - ஸ்டாலின் ஆகிய இரட்டைக் குதிரைகளைத் திருப்திப்படுத்த முடியாமல் நேரு திணறிவருவதுதான் அவரது முகத்தில் அதிகமாகத் தெரிகிறது. கவலையை மறக்க அவர் கண்டுபிடித்திருக்கும் மாற்று வழி விவசாயம்தான். சொந்த ஊரில் இருந்தால் அதிகாலையிலேயே நிலத்தில் இறங்கி வேலை பார்க்க ஆரம்பித்துவிடுவார். தன்னை மறந்து நேரத்தைக் கழிப்பார். இந்த அரசியல்வாதிகளைப் புரிஞ்சுக்கவே முடியலையேப்பா!

ஐ.பெரியசாமி


"தலைவர் அவர்களே... இந்த சாமானியனின் இல்லத் திருமணத்தை நீங்களே நேரில்

வந்து நடத்திவைத்துஇருப்பதை நினைத்தால், எனக்குப்பெருமை யாக இருக்கிறது. இதற்கு நான் காலம்எல்லாம் கடன்பட்டு இருக்கிறேன்" என்று சொல்லும்போதே அழுகை முட்டிக்கொண்டு பீறிட்டது ஐ.பெரியசாமிக்கு!

அடுத்துப் பேசிய முதல்வர் கருணாநிதி இப்படிச் சொன்னார், "தி.மு.கழகத்தில் கே.வி.கே. சாமி காலம் தொட்டு இந்தக் காலம் வரையில் பல சாமிகள் இருந்தாலும் கூட, இவர் அவர்களுக்கு எல்லாம் ஒரு படி மேலே பெரிய சாமி என்பதால், இவர் எனக்கு முக்கியமானவர். இந்த நட்பு உனக்கும் எனக்கும் ஏற்பட்டபந்தத் தால் ஏற்பட்டது. என்றென்றும் நான் உனக்கு அண்ணனாக இருப்பதிலே மகிழ்ச்சி அடைகிறேன்."

"தலைவர் ஏன் இப்படி சொன்னார்?" என்று கல்யாண வீட்டு சாப்பாட்டுக் கூடத்திலேயே பரபரப்பானது. "பெரிய குடும்பத்துக்கு வந்த மிகப் பெரிய பழி புகாரைச் சத்தம் இல்லாமல் முடித்துக் கொடுத்ததே நம் அண்ணன்தான். விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அத்தனைபேரை யும் தென் மாவட்டத்தில் இருந்து தெலுங்கு தேசம் கொண்டுபோய் வைத்திருந்து, காவல் காத்து, இறுதியில் விடுதலைச் செய்தி வரை சொல்லவைக்க நம்ம அண்ணன் பட்டபாடு கொஞ்சநஞ்சம் இல்லை. அதனால்தான் தலைவர் இப்படிச் சொன்னார்" என்று விஷயம் அறிந்த ஒருவர் பதில் அளித்தார். கோபாலபுரம் குடும்பத்துக்கு ஒன்று என்றால்எதைப் பற்றியும் கவலைப்படாமல் செய்து தரும் மனிதர் ஐ.பி. அதன்அதிகார மையமாக இருக்கிற அத்தனை பேரையும் மனம் நோகாமல் வைத்துக்கொள்ளும்மந்திரி களைப்பட்டியல் இட் டால், இவரது பெயரை முதலில் எழுதலாம்.

ஆரம்பம் முதலே அப்படித்தான் இருந்தார். 'எம்.ஜி.ஆரை ஊருக்குள் விட மாட்டேன்' என்ற அதிரடியான முழக்கம்தான் அவரை வத்தலக்குண்டு ஏரியாவைத் தாண்டிக் கவனிக்கவைத்தது. அப்போது நடந்த உள்ளாட்சித் தேர்தலிலும் அவர் வெற்றி பெற, அதுவே காரணம் ஆனது. 96 தேர்தலின்போது ம.தி.மு.க. பக்கம் பொன்.முத்துராமலிங்கம் போனதால், யாருக்கு மந்திரி பதவி தருவது என்று கருணாநிதி தேடிக் கண்டுபிடித்து சிறு தொழில் துறை மந்திரி ஆக்கினார் இவரை.

அப்போதெல்லாம் அமைச்சர் கோ.சி.மணிஅறையில் மதிய நேரத்தில் ஒரு மினி கேபினெட் கூடும். நேரு, எம்.ஆர்.கே. பன்னீர், ஐ.பி. ஆகியோர் அதில் அவசியம் இருப்பார்கள். ஒன்றாக உட்கார்ந்துசாப்பிடுவார்கள். அந்த பந்தம் இன்றும் தொடர்கிறது. கோ.சி.மணிக்கு வயதாகிவிட்டதால் தலைமைப் பொறுப்பை நேரு எடுத்துக்கொண்டார். இவர்கள் ஒரு கோஷ்டி. (இதற்கு எதிரானது பொன்முடி, எ.வ.வேலு அணி). இதில் நேருவைப் பார்த்துப் பலரும் பயப்படுவார்கள். பன்னீர் என்ன சொல்ல வருகிறார் என்று புரியாமல் தவிப்பார்கள். ஆனால், ஐ.பி. அமைதியானவர். கோரிக்கைவைத்த ஆளைவிட அமைதியாகக் கேட்பார். பாந்தமாகப் பதில் அளிப்பார். கட்சி உறுப்பினர் கார்டு வைத்திருந்தால் நிச்சயம் செய்துகொடுப்பார். கட்சிக்காகப் பாடுபட்டு எந்தப் பிரதிபலனையும் அனுபவிக்காமல் இருக்கும் மூத்த உறுப்பினர்களுக்குப் பொற்கிழி வழங்க வேண்டும் என்று கருணாநிதி உத்தரவிட்டபோது, 10,000 பேருக்குத் தலா 10,000 கொண்ட பொற்கிழியை அள்ளிக் கொடுத்தவர் ஐ.பி. இந்த அறிவிப்பையே மறந்துபோன மாவட்டங்கள் சில உண்டு. அதேபோல், வருமானத்துக்கு வழி இல்லாத நிர்வாகிகளுக்கு, மாதச் சம்பளம் கொடுப்பது வரை திண்டுக்கல் மொத்தமும் அவருக்கு திமுதிமு ஆதரவு. ஆனால், தி.மு.க. ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே அவமானப்பட்டு நின்றது இவரது துறையினால்தான்.

தி.மு.க. கெட்ட கனவாக நினைத்து மறந்துவிட நினைக்கிற அறிவிப்புகளில் ஒன்று, 'நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு இரண்டு ஏக்கர் நிலம் இலவசமாக வழங்கப்படும்' என்ற அறிவிப்பு. இது மறக்கக்கூடியதா என்ன? தமிழகத்தில் 50 லட்சம் ஏக்கர் நிலம் இருப் பதாகவும் அது பண்படுத்தப்படும் என்றும் அ.தி.மு.க. அறிக்கையில் எப்போதோ சொல்லப்பட்டதை இவர் கள் எடுத்துக்கொண்டு இப்படி அறிவித்தார்கள். ஆனால், அந்த அளவு தமிழகத்தில் தரிசு நிலங்கள் இல்லை என்பது தெரிந்து அதிர்ந்துபோனார்கள். இந்த உண்மையை உணர்ந்த அ.தி.மு.க., 'எத்தனை பேருக்கு இலவச நிலம் கொடுத்திருக்கிறீர்கள்?' என்று சட்டமன்றத்தில் கேட்க, 'எவ்வளவு இருக்கிறதோ அவ்வளவையும் கொடுத்துவிடுவேன்' என்று முதல்வர் கருணாநிதி சொன்னார். 'கையளவு நிலம் இருந்தால்கூட அதைப் பங்கிட்டுத் தருவேன்' என்றார். 'நீங்கள் நிலத்தைக் கொடுங்கள், நான் செம்மைப்படுத்திக் கொடுக் கிறேன்' என்று இன்னமும் இறங்கினார். சட்டமன்றத்தில் இதற்குப் பதில் அளிக்க முடியாமல் ஐ.பி-க்கு பி.பி. எகிறி ஷுகர்கூடியதுதான் மிச்சம். இது அவரது உடல் நிலையை அதிகமாகப் பாதித்தது.

அடுத்து, மதுரையில் இருந்து கிளம்பி வந்த குங்குமப் பிரமுகர் இன்னும் ஆரோக்கியத்தைக் கெடுத்தார். 'அண்ணன்தான் உங்களுக்குப் பக்கத்திலேயே இருக்கச் சொன்னார்' என்று சொல்லிய அந்தப் பிரமுகர், கோட்டையில் அமைச்சரின் அறையை ஆக்கிரமித்தார். அமைச்சர் ஆடினால், அசைந்தால், அது உடனடியாக மதுரைக்குச் சொல்லப்படும். அத்தனை அசைவுகளும் ஸ்கேன் செய்யப்பட்டன. இவர் இங்கு அனுப்பப்பட்டது மண்ணைப் பொன்னாக்குவதற்குத்தான். தமிழ்நாட்டு இயற்கை வளத்தை அரசாங்கத்தின் சார்பிலேயே கணக்கில்லாமல் அள்ளி, ஆற்றுப் பகுதிகளைப் பாலை யாக மாற்றும் காரியம் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் தொடங்கியது. அப்போது, அதைக் கடுமையாக எதிர்த்தது தி.மு.க. ஆனால், இவர்கள் ஆட்சிக்கு வந்ததும் முந்தைய ஆட்சியில் புரோக்கராக இருந்தவர்களே இதிலும் தொடர்ந்தார்கள். சிவகங்கை 'காசு'ம் புதுக்கோட்டை 'புராணப்' பாத்திரமும் தென்னாட்டின் அத்தனை மண்ணையும் அடிமட்டம் வரை சுரண்டியவர்கள். அவர்களோடு இந்தப் பிரமுகருக்கு அதிக நெருக்கமாம். மந்திரியின் அனெக்ஸ் அறையை இவர் ஆக்கிரமித்துக்கொண்டார். துறை சார்ந்த சின்ன விஷயங்களைக்கூடச் செய்யவிடாமல் இந்தப் பிரமுகர் தடுப்பதாக மந்திரிக்கே கோபம் ஏற்பட்ட நிலையில்தான், ஒருநாள் அதிகாலை முதல்வரிடம் இருந்து அழைப்பு.

"யாருய்யா அந்தப் பொட்டு?" என்ற கேள்வி முதல்வரிடம் இருந்து வந்ததும், "அண்ணனுக்கு வேண்டிய தம்பிதாங்க" என் றார் இவர். "அவனுக்கு மந்திரி அறையில என்னய்யா வேலை? எல்லோரும் சேர்ந்து என் ஆட்சிக்குக் கெட்ட பேரை உண்டாக் குறீங்களா? போ... அவனை விரட்டு" என்று காய்ச்சிஎடுத்து விட்டார் முதல்வர். ஐ.பி-யைப் பொறுத்தவரை யார் அவரிடம் எதைச் சொன்னாலும் சம்பந்தப்பட்டவருக்குச் சொல்லிவிடும் நல்ல பழக்கம்கொண்டவர். அந்தப் பிரமுகரை அழைத்து, "நீ என்னோட ரூமுக்கு வராதே! தலைவர் உன் மேல ரொம்பக் கோபமா இருக்கார்" என்று சொல்லி அனுப்பினார். குங்குமம் கலங்கவே இல்லை. இன்னொரு மந்திரியின் அறையில் தனது ஜாகையை மாற்றிக்கொண்டார். இரண்டு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் ஐ.பி. அறையில் அவரே மீண்டும் உட்கார ஆரம்பித்தார். இன்றைக்கும் அதில் மாற்றம் இல்லை.

வீட்டு வசதித் துறைக்கு அறிவிக்கப்படாத மந்திரியாகவே அந்தப் பிரமுகர் வலம் வருகிறார். முதல்வர் அலுவலகத்தில் இருக்கும் 'அரசாட்சி' செய்யும் அதிகாரியும் குங்குமமும் இணைந்து செய்யும் காரியங்கள் முழுமையாக முதல்வர் கவனத்துக்குச் செல்வது இல்லை என்பதுதான் ஐ.பி. நலம் விரும்பிகளின் வருத்தம். "ஐ.பி-யை வருவாய்த் துறை மந்திரின்னு மட்டும் அழைத்தால் போதும். மற்றும் வீட்டு வசதி வாரியத் துறை என்று கூப்பிடாதீர்கள்" என்று இந்த விரும்பிகள் கெஞ்சுகிறார்கள். அந்த அளவுக்கு டம்மியாக இருந்தாக வேண்டிய நெருக்கடி.

வீட்டு வசதித் துறை தன்னைவிட்டுப் போனால்கூட நல்லது என்றே மந்திரி நினைப்பதாகச் சொல்கிறார்கள். இந்தத் துறைகூட அவருக்கு இடையில் வந்ததுதான். சுப.தங்கவேலன் இதைக் கவனித்து வந்தார். முதல்வரின் பரிந்துரையைக்கூட தங்கவேலன் மறந்துவிட்டதால் துறை அவரிடம் இருந்து பறிக்கப்பட்டது. தொடக்கத்தில் வருவாய் மற்றும் சட்டத் துறை அமைச்சராகத்தான் ஐ.பி. பொறுப்பேற்றார். அது ஐ.பி-யிடம் இருந்து பறிக்கப்பட்டது அற்ப காரணமாகத்தான். டெல்லியில் நடந்து வரும் ஒரு வழக்கு தொடர்பாக அதிகாலையில் அமைச்சருக்கு போன் செய்திருக்கிறார் முதல்வர். அன்றைய தினம் திண்டுக்கல்லுக்கு ரயிலில் போய்க்கொண்டு இருந்த ஐ.பி. தலையணைக்கு அடியில் போனை வைத்துவிட்டுத் தூங்கிவிட்டார். ஒரு மணி நேரம் அடித்துக்கொண்டே இருந்தது மணி. காத்துக்கொண்டே இருந்த கருணாநிதி, அமைச்சரை சென்னைக்கு வரவழைத்தார். "சட்டத் துறைக்கு மந்திரியா இருக்கிறவர் எனக்குப் பக்கத்தில் சென்னையில் இருந்தால் தேவலை. அதனால துரைமுருகனுக்குக் கொடுத்துடலாம்னு இருக்கேன்" என்று பாந்தமாகச் சொல்லி, பறித்துக்கொண்டார். சிறைத் துறை தொடர்ந்தது. இதுவும் அவரிடம் அதிக காலம் நீடிக்கவில்லை. தேனி கஞ்சா வியாபாரி ஒருவர் புழல் சிறையில் இருந்தார். கைதி ஒருவர் பரோலில் சென்று திரும்ப வேண்டுமானால், அதற்கு அமைச்சரின் கையெழுத்து அவசியம். தேனிக்காரர் மூன்று, நான்கு முறை தொடர்ந்து பரோலில் போனதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த உள்துறைச் செயலாளர் மாலதி, முதல்வரிடம் சொல்ல... இதற்குக் காரணமான பி.ஏ-வுக்குக் கல்தா கொடுத்துவிட்டதாக அமைச்சர் பதிலளிக்க, சமாதானம் அடையாத முதல்வர், அதையும் பறித்து துரைமுருகனிடம் கொடுத்தார். இப்படி எந்தத் துறையை எடுத்தாலும் ஐ.பி-க்குச் சிக்கல்தான். 'அண்ணனுக்கு வந்ததும் அதிகம்; அதனால நொந்ததும் அதிகம்' என்கிறார் ஆத்தூர் தம்பி ஒருவர்.

ஐ.பி-க்கு இரண்டு மகன்கள். மூத்தவர் செந்தில்குமார். இவரை ஐ.பி.எஸ். (ஐ.பெரியசாமி மகன் செந்தில்குமார் என்று அர்த்தம்) என்று அழைக் கிறார்கள். திண்டுக்கல்லைப் பொறுத்தவரை இவரே அனைத்துக்குமான அதிகார மையம். இவரது காதல் திருமணத்தை எந்தச் சிக்கலும் இல்லாமல் நடத்திக் கொடுத்தார் முதல்வர். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திண்டுக்கல் தொகுதியைக் குறிவைத்தார் ஐ.பி.எஸ். ஆனால், ஐ.பி. அதற்கு உடன்படவில்லை. அடுத்து நடக்க இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் நிற்க மகன் ஆயத்தமாகி வருகிறார். அப்பாவுக்கும் மகனுக்கும் ஒரே நேரத்தில் ஸீட் கிடைக்குமா என்று கேட்டால், 'வீரபாண்டியார் குடும்பத்துல இல்லையா?' என்று கேட்கிறார் ஒரு நண்பர். தி.மு.க-வில்தான் எல்லாவற்றுக்கும் முன்மாதிரி உண்டே!

அழகிரி - ஸ்டாலின் என்று இரட்டைக் குதிரை யில் சவாரி செய்யும் மந்திரிதான் இவரும். அழகிரி மட்டுமல்ல; அவரது மருமகனுக்குக்கூட நடுங்குவார். அதே சமயம், கண் தானம் செய்துவிட்டு, 'ஸ்டாலின் உடல் தானம் செய்ததால்தான், நான் கண் தானம் செய்ய ஊக்கம் பெற்றேன்' என்று பேசுவார். ஆச்சர்யம், சகோதரர்கள் இருவருமே இவரிடம் நெருக்கமாக இருப்பதாகக் காட்டிக்கொள்வது.

வருவாய் மற்றும் வீட்டு வசதித் துறையானது மக்களின் வாழ்க்கைப் பிரச்னைகளோடு தொடர்பு உடையது. பிறப்பு - இறப்பு, வருமான வரி,சொத்துச் சான்று வரை அனைவருக்கும் தர வேண்டியது இந்தத் துறை. பைசா இல்லாமல் இதில் எதையும் வாங்க முடியாது என்பது யதார்த்தம். பொங்கல், தீபாவளிக்குத் தரப்படும் இலவச வேட்டி - சேலை கள், ஒரு மாதத்துக்குக்கூட ஒழுங்காகப் பயன்படுத்த முடியாத அளவு 'தரம்' இருக்கும். 1.12 கோடி பேருக்கு இலவச டி.வி. தரப்பட்டுள்ளது. ஆனால், இன்னும் வாங்காதவர்கள் என்று பட்டியல் இட் டால் பல லட்சம் பேர் வருகிறார்கள். அனைத்துக்கும் மேலாக சுனாமி பாதித்த பகுதிகளுக்கு ஆறு ஆண்டுகள் ஆகியும் இன்னும் முழுமையான நிவா ரணங்கள் கிடைக்கவில்லை. 3,000 கோடி ரூபாய் பணத்தை இதுவரை செலவு செய்ததாகச் சொல் கிறார்கள். ஆனால், மீனவன் இன்னமும் வசதி அற்றவனாகத்தான் இருக்கிறான்.

மத்தியதரவர்க்கத்தின் மிகப் பெரிய கனவாக இன்று வீடுகள் மாறிவிட்டன. அந்தக் கனவை நிறை வேற்றி உதவுவதற்காகத்தான் வீட்டு வசதித் துறையே தொடங்கப்பட்டது. ஆனால், இன்று தனியார் பில்டர்கள் கையில் வீடு கட்டும் தொழில் மொத்தமாகப் போய்விட்டது. இவர்கள் நிர்ணயிக்கும் விலைகள், தனியார் வங்கிகள் வாங்கும் வட்டிகள் சேர்ந்து வீடு வாங்குவதையே முடக்கிவருகின்றன.

'வாங்கத்தக்க விலையில் அனை வருக்கும் வீடு' என்பதைக் குறிக் கோளாகக்கொண்டு இருக்கும் இந்தத் துறை பல்லாயிரக்கணக்கான வீடு களைக் கட்டத் தொடங்கினால் மட்டுமே, ஓரளவாவது நியாயமான விலையில் வீடுகளைப் பெற முடியும். அதற்கான ஆக்கபூர்வமான திட்டம் எதுவும் இதுவரை போடப்பட்டதாகத் தெரியவில்லை.

'நமக்குத்தான் கொடைக்கானல் ஏரியா இருக்கே' என்று நினைத்தால் நாம் என்ன